×

நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படுமா 308 ஆண்டு பழமையான தேவாலயம்?.. சாயல்குடி அருகே மீனவ கிராம மக்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே போர்ச்சுகீசிய, ரோமானிய கட்டிடக்கலையுடன் கட்டப்பட்ட 308 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை நினைவுச்சின்னமாக அறிவித்து, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியிலிருந்து 6 கி.மீ தொலைவில் மூக்கையூர் கடற்கரை கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழில் செய்கின்றனர். இங்கு புனித சந்தியாகப்பர் தேவாலயம் முதலில் சிறிய பனை மர பொருட்களால் கட்டப்பட்ட ஓட்டு கட்டிடத்தில் இருந்துள்ளது. பின்னர் 1715ம் ஆண்டில் போர்ச்சுகீசிய மற்றும் ரோமானிய கட்டிடக் கலை மாடலில் புதிதாக தேவாலயம் கட்டப்பட்டது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி கிராம மக்கள் இந்த தேவாலயத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தேவாலயம் தற்போது சேதமடைந்து, கட்டிடத்தின் மேற்கூரை பகுதியிலிருந்து அவ்வப்போது சுண்ணாம்பு காரைகள் சிறிது சிறிதாக இடிந்து விழுந்துள்ளது. இதனால் உள்ளே பிரார்த்தனை, வழிபாடு செய்வதை நிறுத்தி விட்டு, எதிரே புதிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்த பழமையான தேவாலயம் சிவகங்கை மறை மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ளது. போர்ச்சுகீசிய, ரோமானிய கட்டிடக் கலை அம்சத்தை கொண்டு கட்டப்பட்டிருக்கும் பழைய தேவாலயத்தை நினைவுச் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூக்கையூர் பஞ்சாயத்து தலைவர் தொம்மை கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டம் அருகேயுள்ள தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு முதல் வேம்பார் வரை 7 கடற்கரையைச் சேர்ந்த இந்து பரதவ மக்கள் எங்கள் மூதாதையர்கள். இவர்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே கீழக்கரை வரை தீவுகளில் முத்துக்குளிப்பதும், மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஏற்பட்ட தொழில்போட்டி மோதலை சமாளிக்க பரதவ மக்கள் கோவாவில் இருந்த போர்ச்சுகீசியர்களிடம் ஆயுத உதவி கேட்டுள்ளனர்.

அதன் பிறகு, 1529ம் ஆண்டில் 40,000 இந்து பரதவர்கள் பெர்ணாண்டோ கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் தான் மூக்கையூரில் தங்கி இன்னும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்காக 1715ல் இங்கு புனித சந்தியாகப்பர் தேவாலயம் கட்டப்பட்டு பல தலைமுறைகளை கடந்துள்ளது.

சுற்று வட்டார பகுதியிலேயே இத்தேவாலயம் புகழ் பெற்றது. அந்த காலத்தில் பல பங்கு மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்துள்ளனர். கடுக்காய், கருப்பட்டி, பதநீர், சுண்ணாம்பு பாறை, பாறைக்கல், குறு மணல் பயன்படுத்தி போர்ச்சுகீசிய ரோமானிய கட்டிடக் கலையில் கட்டப்பட்ட, இத்தேவாலயத்தை பழமை மாறாமல் புதுப்பித்து, நினைவுச் சின்னமாக்க வேண்டும். அப்போதுதான் வருங்கால சந்ததியினர் இதன் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்’’ என்றார்.

The post நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படுமா 308 ஆண்டு பழமையான தேவாலயம்?.. சாயல்குடி அருகே மீனவ கிராம மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,Ramanathapuram ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...